Wednesday 11 September 2019

பாரதிச் சாறு.... :-1



முன்னுரை:
முற்றத்து விளக்கொளியில் வானத்துச் சூரியனை அடையாளம் காட்டும் சிறுபிள்ளைத் தனமான முயற்சி இது என்பதைத் தெரிந்தே இதில் இறங்கினேன்.
பாரதியின்கவிதைத் தொகுப்பில், தேர்ந்தெடுக்கப்பட்டப் பாக்களில் (வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல், கண்ணி, வசனம் – என்றுபல கட்டுகளில் இருக்கும் பாக்களில்) உள்ளக் கருத்துகளை அடிப்படைக் குறிப்பாக எடுத்துக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு சிறுகுறிப்பு அல்லது விளக்கஉரைத் தொகுப்பு இது. பாரதியின் உள்ளக் குரலை இருவரிக் குறிப்புகளாக, முடிந்த அளவுக்கு அவரது சொற்களை வைத்தே, குறள் அமைப்பில் தர முயன்றிருக்கிறேன்.
குறள் அமைப்புக்கு மாற்றும்பொழுது ,வெண்பா இலக்கணத்திற்காக, மூலத்தில் இருந்து அமைப்பில் சில மாறுதல்கள் இருக்கும் . ஏற்றுக் கொள்ளுங்கள் . ஏனெனில் இது எனது விளக்கவுரைக் குறள் .
ஒரு புரிதலுக்காக ஒத்தக் கருத்துள்ள குறள்களை தலைப்புகளின் கீழ் தொகுக்க முனையும் போதுதான் உணர்ந்தேன் . பாரதி ஏற்கனவே 110 தலைப்புகள் (புதிய ஆத்திச்சூடி என்னும் பெயரில்) எழுதி வைத்திருக்கிறான் என்பதை. எல்லாம் முடிந்தபின் பார்த்தால், அவனது ஆத்திச்சூடியில் பெரும்பாண்மைக்கு(85), அவனது குறிப்புகளை வைத்தே ஒரு விளக்கமும் தந்தது போல் நிறைவாகிவிட்டது ... அவனிடம் இருந்து எடுத்த ஒவ்வோர் இருவரியும் தனித்தனியாகப் படித்தாலும் பொருள் கொள்ளும் வண்ணம் அமைந்திருப்பது பாரதியின் எண்ணத்தின் சிறப்பு.

குறிப்பு :
• தனியே விளக்கம் தேவைப்படாத வெள்ளை அறிக்கைப் போன்றத் தெள்ளத் தெளிவான கவிதைகளையும், எல்லாரும் அறிந்த பாடல்களையும் இங்கே கணக்கில் எடுக்கவில்லை.
• இத்தொகுப்பின் குறள்களில் ‘நான்’ , ‘அவன்’ என்னும் இடமெல்லாம் இருப்பது பாரதியே

.பாரதியின் குரல்

தன்னைப் பற்றி அவன் (தன்னைப் பற்றியவன்) அறிமுகம் செய்கிறான்:

நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
நமக்காது இருத்தலும் தான் 1

விண்ணில் பறக்கும்புள் எல்லாம்நான், மண்ணில்
பிறக்கும் விலங்கெல்லாம் நான் 2

காட்டில் வளரும் மரமும்நான், காற்றும்
புனலும் கடலலையும் நான் 3

விண்ணில் தெரிகின்ற மீனும்நான், மண்ணில்
கிடக்கும் புழுவும்தான் நான் 4

வெட்ட வெளியின் விரிசலும்நான், அவ்விரிவுள்
வாழும் உயிர்களும் நான் 5

ஞானச் சுடர்வானின் மெய்மையும்நான், நானெனும்
பொய்மையை நெய்வதும் நான் 6

கம்பர் இசைக்கவிக் கூடமும், மாந்தர்
வியக்கின்ற மாடமும் நான் 7

.அவனைப் பற்றி ஒர்அறிமுகம் செய்கிறேன் நான்:
விதியை விதித்ததிவன் தான் :
’இனியோர் விதிசெய்வோம்’ என்று தனியாய்த்
தணியாது இருந்ததிவன் தான் 8

’தனியொரு வர்க்கிங்கு உணவில்லை என்றால்
உலகழிப்போம்’ என்றதிவன் தான் 9

’நோக்கும் திசையெல்லாம் நாமன்றி யார்’எனும்
வாக்கை விதைத்ததிவன் தான் 10

’காக்கை குருவிஎங்கள் சாதி’எனும் நோக்கை
விதைக்க முனைந்ததிவன் தான் 11

’மெல்லத் தமிழினிச் சாகும்’ எனும்வீணர்
சொல்லதை வென்றதிவன் தான் 12

’பழங்கதைகள் பேசிப் பயனில்லை’ என்னும்
வலுக்கருத்தில் நின்றதிவன் தான் 13

’சாதி இரண்டொழிய ஏது’என்னும் ஒளவையின்
நீதியை ஏற்றதிவன் தான் 14

’பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரத்தை நம்முள்
வரவேற்போம்’ என்றதிவன் தான் 15

சித்தர் பலர்வந்த இந்நாட்டில் ’சித்தன்நான்’
என்றுவந்து நின்றதிவன் தான் 16

கடவுளைக் கண்டதிவன் தான்:
’காக்கைச் சிறகினிலே’ பார்காக்க வந்தவனின்
கார்வண்ணம் கண்டதிவன் தான் 17

பார்க்கும் மரத்திலெல்லாம் பாரளந்த பார்த்தனின்
பச்சைநிறம் பார்த்ததிவன் தான் 18

கேட்கும் ஒலியிலெல்லாம் சாட்சியின் கீதம்
இசைப்பதைக் கேட்டதிவன் தான் 19

தீக்குள் விரல்வைத்தால் நந்தனைத் தீண்டுமின்பம்
தோன்றுமெனச் சொன்னதிவன் தான் 20



தொடரும்

பாரதிச் சாறு.... :-1

முன்னுரை: முற்றத்து விளக்கொளியில் வானத்துச் சூரியனை அடையாளம் காட்டும் சிறுபிள்ளைத் தனமான முயற்சி இது என்பதைத் தெரிந்தே இதில் இறங்கினேன். ...